#தூத்துக்குடி மாவட்டம்

இலங்கையில் சிறைப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சமக ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தருவைகுளம் மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து 2 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 22 பேரை இலங்கைக் கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாக கூறி கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் 22 மீனவர்களுக்கு 7 கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 22 பேரை மீட்க மத்திய மாநில அரசிடம் தருவைகுளம் மீனவ மக்கள் வலியுறுத்தி வருகின்றனர், இந்நிலையில் தருவைகுளம் மீனவர்கள் 22 பேரை உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் மாநில துணை பொதுச் செயலாளர் காமராசு நாடார், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை முன்னிலை வகித்தனர்.

இதில் இலங்கை சிறையில் வாடும் தருவைகுளம் மீனவர்கள் 22 பேரையும் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை ரத்து செய்து வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தினர் 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.