by,CN. அண்ணாதுரை
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், மாவட்ட அலுவலகம் கலைஞர் அரங்கில் நடந்தது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பேசுகையில்;
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மகளிருக்கான ஆட்சியாக நடைபெறுகிறது பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட வளம் பெற தொலைநோக்கு சிந்தனையோடு திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம், மகளிர் சுயஉதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டது. 10ம் வகுப்பு வரை பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திருமண உதவித்தொகை திட்டம் வழங்கப்பட்டது.
அதேபோல் அடுப்பூதும் பெண்களுக்கு புகை மூலம் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து கலைஞர். கேஸ் அடுப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். முதல் தலைமுறை பட்டதாரிக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000, விடியல் பயணம், பெண்கள் கல்லூரி படிப்பை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 என ஆரம்பித்து அதில் அரசுப்பள்ளியில் பயின்றவர்கள் மட்டும் என்று இருந்ததை அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்தி புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தூத்துக்குடியில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இப்படி மகளிருக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வரும் முதலமைச்சர். தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுக்காத வகையில் மொழி உரிமை காக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருமொழி கொள்கை போதும், மும்மொழி கொள்கை வேண்டாம் என்று மொழி திணிப்பை எதிர்த்து முதலமைச்சர் உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதனை பின்பற்றி பல மாநிலங்கள் தனது மாநிலங்களின் மொழியை விட்டுக்கொடுக்க முடியாது என்ற நிலையை எடுத்துள்ளனர். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய எந்த நிதியுதவியையும் ஒன்றிய அரசு தர மறுக்கிறது. மற்ற மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்திட்டுள்ளார்கள். தமிழகம் மட்டும் மறுக்கிறது என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாடும். தமிழ்நாட்டு மக்களும் எப்போதும் சுயமரியாதையுடன் தனித்துத்தான் நிற்பார்கள். நம்முடையை உரிமையை விட்டுக்கொடுக்காமல் முதலமைச்சர் வழியில் நின்று அனைவரும் மாநில உரிமைக்காக குரல் கொடுக்க உறுதியேற்க வேண்டும் என கனிமொழி எம்பி பேசினார்.முன்னதாக மகளிரணி நிர்வாகிகளுக்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சேலைகள் வழங்கினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, கோவில்பட்டி யூனியன் முன்னாள் தலைவர் கஸ்தூரி, மாவட்ட முன்னாள் கவுன்சிலர் தங்கமாரியம்மாள், மாநகர துணை செயலாளர் பிரமிளா. பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மண்டல தலைவர்கள் அன்னலெட்சுமி, கலைச்செல்வி, சார்பு அணி நிர்வாகிகள் ஐடி விங் அருணா தேவி, மருத்துவர் அணி ஜூடி, மகளிரணி ஜெயக்கனி, மாணவரனி சத்யா, பார்வதி. சந்தனமாரி, நாராயணவடிவு, இந்திரா, , செல்வி, சீதா லெட்சுமி, பெல்லா, ரேவதி, மீனாட்சி, கன்னிமரியாள், டோலி, வட்ட செயலாளர் பத்மாவதி, கவுன்சிலர்கள் ஜெயசீலி, ஜாக்குலின் ஜெயா, வைதேகி, சுப்புலெட்சுமி, பவானி, ஜான்சிராணி, மரிய கீதா, விஜயலெட்சுமி, பாப்பாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராமலெட்சுமி நன்றி கூறினார்.