March 13, 2025
#தூத்துக்குடி

காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை – மேயர் ஜெகன் அதிரடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் காலி மனைகளில் தேங்கியுள்ள மழை நீரை நில உரிமையாளர்கள் உடனடியாக அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி எச்சரிக்கை செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 12.03.25 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் செ.ஜெனிட்டா , முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் அன்னலட்சுமி வரவேற்றார்.

முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்;மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்க்கிணங்க நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பெறப்படும் பல்வேறு மனுக்களில் பெரும்பாலன மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.

மேற்கு மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மழைக் காலங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல்வேறு கட்டமைப்புகளை மேற்கொண்டதன் பலனாக மேற்கு மண்டலத்தில் மழைநீர் தேங்குவது பெருமளவில் தடுக்கப்பட்ட நிலையில், சாலை, வடிகால் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை 80 சதவீதம் முழுமையாக நிறைவேற்றி உள்ளோம். குறிப்பிட்ட சில குறுகலான சாலைகள், ஆறு அடி பாதைகளில் பேவர் பிளாக் சாலைகள், வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் முழுமை பெறும்.

மேலும் மேற்கு மண்டலப் பகுதிகளில் காலி மனைகளில் தேங்கியுள்ள மழை நீரை மனைகளின் உரிமையாளர்கள் அகற்ற வேண்டும் என மாநகராட்சி சார்பில் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். அதன்படி மழைநீரை அகற்றிய காலிமனை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் பாராட்டி கௌரவப்படுத்தி வருகிறோம். ஏற்கனவே ஒவ்வொரு முறையும் இது குறித்து வலியுறுத்தி வந்தாலும் பல இடங்களில் காலி மனைகளில் நீர் தேங்கியுள்ள இடங்களின் உரிமையாளர்கள் இந்த அறிவிப்பை கண்டு கொள்வதில்லை. இதனால் அறுகிலுள்ள கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதோடு, வளர்ப்பு பிராணிகளும் பாதிக்கப்படுகின்றன. காலி மனைகளில் தேங்கியுள்ள மழை நீரால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்ட விட கூடாது எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலி மனைகளின் உரிமையாளர்களிடம் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்வது; உடனடியாக உங்கள் மனைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும் வரும் நாட்களில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தாத காலிமனை உரிமையாளர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகன் கூறினார்.

 

நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணக்குமாா், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி ஆணையர் சுரேஷ் குமார், நகர உதவி பொறியாளர் சரவணன், நகா்நல அலுவலர் அரவிந் ஜோதி, மாமன்ற உறுப்பினர்கள் பொன்னப்பன், கனகராஜ் , விஜயலட்சுமி, ஜான் சீனிவாசன், சந்திர போஸ், ராமர், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சி.என்.ரவீந்திரன், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.